img/728x90.jpg
தமிழகத்திற்கு இன்று வேண்டும் முனை மழுங்கா வீரன் தமிழரசன் போன்ற புரட்சிகர சிந்தனையாளர்கள்!

தமிழகத்திற்கு இன்று வேண்டும் முனை மழுங்கா வீரன் தமிழரசன் போன்ற புரட்சிகர சிந்தனையாளர்கள்!

தமிழகத்திற்கு இன்று வேண்டும் முனை மழுங்கா வீரன் தமிழரசன் போன்ற புரட்சிகர சிந்தனையாளர்கள்!

 
தமிழர்கள் தமிழகத்திலும் தமிழீழத்திலும் அடிமைகளாக வாழும் நிலை ஒழிய தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ் நாட்டு மக்கள் விடுதலை பெற வேண்டும்!
 
இலங்கை மண்ணில் மட்டுமா தமிழர்கள் அடக்கப்படுகிறார்கள்?
 
தமிழகத்தில் தமிழ் மக்கள் தாம் அடிமைகள் என உணரமுடியாத வகையில் மிக கொடூரமாக வஞ்சிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்படுகின்றார்கள். 
 
தமிழக மீனவர்கள் வாழ்வியலில் சரி கூடங்குளம், முல்லைப்பெரியாறு, காவிரி, மீத்தேன் தூத்துக்குடி, ஜல்லக்கட்டு என எந்த தமிழ் தமிழ் தேசிய போராட்டங்களை எடுத்தாலும் தமிழ் மக்களை அரசு அடக்கி ஒடுக்கி போராட்டங்களை திசை திருப்பி போராடியவர்களை கைது செய்து என முடக்கி வைக்கவே துடிக்கின்றன.
 
அதற்கு சிறந்த உதாரணம் இன்று ராஜீவ் கொலையில் எந்த குற்றமும் செய்யாத ஏழு தமிழர்களின் 28 ஆண்டுகளுக்கும் மேலான சிறை கொட்டடி சித்திரவதை. 
 
அதே போல் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த தோழர் தமிழரசன் பாதையில் போராடினார்கள் என்பதற்காகவே சட்டத்திற்கு மாறாக 5 ஆண்டுகளாக வஞ்சிக்கப்படும் 5 தமிழ் தேசிய போராளிகள்  மதுரை நடுவண் சிறையில் கொடூரமாக வதைக்கப்படும் கொடுமை!
 
ஆனால் தமிழ்  மக்களுக்காக போராடிய அந்த இளைஞர்களின் விடுதலைக்காக எத்தனை தமிழக மக்கள் போராடுகிறார்கள்? எத்தனை தமிழ் தேச அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கின்றன? 
 
இங்கே தான் இந்தியத்தின் ஆதிக்க வலிமைக்கு தமிழினம் கட்டுண்டு கிடக்கும் கொடுமை புலப்படுகின்றது.
 
தமிழ் மக்களை பிரித்தாள்வதில் ஆதிக்க சக்திகள் எப்பொழுதும் வலிமையாக செயல்பட்டு வந்துள்ளன. 
 
அதை எதிர்த்து தகர்க்க வேண்டிய தமிழ் மக்களோ ஒன்றுபட தவறியுள்ளார்கள்.  அதனால் தான் எண்ணிக்கையில் கோடி கோடியாக இருந்தும் பலவீனமான நிலையில் தமிழினம் உள்ளது.
 
தமிழகத்தின் வரலாற்று தொன்மையிலான அதன் அடிப்படை ஆதாரம் இமயம் முதல் குமரி வரை தமிழர்கள் ஆண்டார்கள் என்பது. இன்று தமக்கென்றோர் தேசம் இல்லா இனமாக தமிழினம்.
 
இந்திய கூட்டிணையத்தில் பிரித்தானியர் வருகையின் பின் இணைக்கப்பட்ட அடிமை தமிழகம் இன்று தனது அடிமை நிலை உணராமல்.
 
அடிப்படை ஆதாரத்தையே பாதிக்கும் என்ற நிலை ஏற்பட்டால் அமுங்கி போவதா இல்லை கிளர்ந்து எழுவதா இயல்பு நிலை/இயற்கை விதி தமிழினத்தால் உணரப்படாமல் தமிழர்களின் இனஉணர்வு மழுங்கடிக்கப்பட்டு உள்ளது..
 
அடக்குமுறைகளினதும் அடிமைத்தனத்தினதும் ஆணிவேரை அறிந்த உண்மையை அறிந்த எந்த மனிதனும் தனது இழந்த தேசங்களை  மீட்க அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக வலிமையாக  போராடுவது தான் இயற்கை விதி!
 
 தமிழீழ விடுதலை போராட்டம் ஆரம்பிக்க முன்பிருந்தே தமிழ் நாட்டு விடுதலை போராட்டங்கள் தமிழகத்தில் ஆரம்பமாகி இருந்தன. எனினும் சூழ்ச்சிகளால் அந்த போராட்டங்கள் நசுக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டன.
 
அடங்கி கிடந்த அடிமை தமிழகத்தை உண்மைகளை எடுத்துரைத்து கோட்பாடுகளை வகுத்து விடுதலைக்கான பாதை வகுத்து அதன்வழியே எழுந்து போராட புரட்சி பயணத்தை தொடக்கி வைத்து தமிழினத்தை போராட அழைப்பு விடுத்தவரே தமிழ் தேசிய தலைவர் தோழர் தமிழரசன்.
 
தமிழக மண்ணில் இருந்தே அவர் அந்த போராட்டத்தை முன்னெடுத்தார்.
 
தமிழக மண்ணில் இருந்தே போராடினார்கள் அவர் வழி நின்ற போராளிகள் எல்லோருமே.
 
இன்று அவர் வழியில் பல தோழமைகள் அந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள். 
 
போராடும் மக்கள் போராட்டத்தின் தேவையையும் காரணத்தையும் நீதியையும் உணரும் பொழுது அதன் பின்னால்  ஒன்றிணைவார்கள்.
 
அந்த வகையில் ஈழத்து போராடும் தமிழர்களும் தமிழக போராடும் தமிழர்களும் ஒன்றிணைவது இயல்பே.
 
அதற்கு மற்றுமோர் வலுவான காரணம் எம் வலிமையான மொழி!
 
மொழியின் பெயரால் தமிழர்கள் ஒருவர்க்கு ஒருவர் குரல் கொடுப்பார்கள். அதை எவரும் தடுக்கவோ மாற்றவோ முடியாது!
 
தோழர் தமிழரசன் நல்ல மார்க்சியவாதி என்பதை எவரும் இங்கு மறுக்க முடியாதவகையில் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் என்ற உண்மையை இந்திய  அரசே ஏற்று இருப்பதன் அடையாளம் தான் இன்றும் அவர் பெயர் சொன்ன தோழமைகளே 5 ஆண்டுகள் கடந்தும் சிறையில் வைத்து வதைக்கின்றமை. 
 
தோழர் தமிழரசன் பற்றியும் அவரை பற்றி தமிழ் மக்கள் அறிந்து கொள்ளும் தேவைக்கான காரணம் பற்றியும் எடுத்து சொல்லும் ஒரு நூலாக எழுத்தாளர் பாலன் தோழரின் "ஒரு ஈழத்து போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்" என்ற நூல் உள்ளது. 
 
போராளிகளை பற்றி அறிந்து கொள்வதன் மூலம் போராட்டத்தின் நீதி நியாயங்களை அறிந்து தெளிய முடியும்.
 
தோழர் தமிழரசன் என்ற மாவீரன் காலமாகி விட்டான் என அறியாதோர் சொல்லலாம். ஆனால் காலமாக அவர் எழுந்து நிற்கின்றார் என்பதை வரலாறு மீட்டு எழுதி எடுத்து சொல்கிறது.
 
காலத்தை மிஞ்சி காலத்தின் தேவைக்கான போராட்டங்களை மக்களுக்குள் இருந்து எழ வைக்கும் சக்தி உண்மையான உண்மைக்காக நின்ற வரலாற்று தலைவர்களால் அவர்கள் மரணத்தின் பின்பும் வெடித்து வெளிவந்து கொண்டே இருக்கும்.
 
இன்றும் தோழர் தமிழரசனை நேசிக்கும் மக்கள் மனதில் அவர் முனை மழுங்கா போராளியாக நிலைத்து வாழ்கிறார். தமிழக விடுதலைக்கான வரலாற்றை வழி நடத்துகின்றார்.
 
அவரை கொன்றுவிட்டோம் என கூறும் இந்திய  அரசுக்கு அவர் இறந்து 35 ஆண்டுகளின் பின்னரும் அவர் பெயர் பேசப்படுகின்றதே எப்படி என பதில் கூற முடியாது!
 
ஆம்! அது தான் புதைக்கப்படும் மாவீரரின் சக்தி. 
 
மண்ணில் விழும் வீரியம் கொண்ட விதைகள் எல்லாம் நிலம் கிழித்து எழுந்து மரமாக ஒரு நாள் நெடிதோங்கி வளர்ந்தே தீரும்! 
 
இன்றும் தோழர் தமிழரசன்  புகழ் போற்றப்படுகின்றது. அவர் பெருமையை அறிய மறந்தால் நாம் இனஉணர்வு கொண்ட தமிழர்களாக இருக்கவே முடியாது!
 
அவரை தலைவராக கொண்டு தமிழ்த்தேச மக்கள் கட்சி போன்ற கட்சிகளே மக்கள்மய போராட்டங்களை மிக தீர்க்கமாக முன்னெடுத்து வருகின்றன.
 
மார்ஸிய கோட்பாட்டின் அடிப்படையில் மண்ணுக்கு ஏற்ற மார்க்சியத்தை கொண்டு வந்த ஒரு பெரும் தலைவரை விமரிசனங்களால் தகர்க்க முடியாது என்றும்.
 
தமிழர்கள் உள்ளங்களில் தோழர் தமிழரசன் எழுச்சியின் வடிவாக விடுதலையின் பெரும் நெருப்பாக என்றும் வாழ்வார்!