• :
  • :
களத்தில்

பாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவார் இயக்கங்களுக்கும் சிந்தாந்த ரீதியான தோல்வி!

பாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவார் இயக்கங்களுக்கும் சிந்தாந்த ரீதியான தோல்வி!

பாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவார் இயக்கங்களுக்கும் சிந்தாந்த ரீதியான தோல்வி!

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,ஜார்க்கண்ட், தெலுங்கானா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்கும், இந்திய மைய வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் பதவி விலகலுக்கும் ஒரு பொதுவான அடிப்படை உள்ளதென்றால் இவ்விரண்டும் இந்நாட்டின் பொருளாதார சிக்கலின் இரண்டு தனித்த வெளிப்பாடுகளே. 
 
ராஜஸ்தான், ம.பி., ஜார்க்கண்டு ஆகிய மாநிலங்களை ஆண்டுக் கொண்டிருந்த பாரதிய ஜனதாக் கட்சி படுதோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிமையை மக்கள் ஏற்கவில்லை என்பதையும், தாங்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு எதையும் தராமல் இந்துத்துவ மதவாத அரசியலை பேசிப் பரப்புரை செய்தமையை இந்த மூன்று மாநில வாக்காளர்களும் – அவர்களில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்தும் – தெளிவாக புறக்கணித்துள்ளனர் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
 
இது பாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவார் இயக்கங்களுக்கும் சிந்தாந்த ரீதியான தோல்வியாகும். 
 
மேற்கண்ட மூன்று மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் முடிவுகள் இழுபறியாக இருந்ததற்குக் காரணம், அம்மாநில முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவான், அம்மாநில விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு சந்தையில் குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காத நிலையில் அதனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடிவெடுத்து ௹.4,000 கோடியை ஒதுக்கீடு செய்த்தது அவருக்கும் பாஜகவுக்கும் தோல்வியிலும் ஒரு ஆறுதலைத் தந்துள்ளது. மற்றபடி இந்த மூன்று மாநிலங்களிலும் கிராம்ப் பகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் பெருமளவிற்குத் தோல்வியைத் தழுவியுள்ளது கவனிக்கத்தக்கது. 
 
இத்தேர்தல் முடிவுகள் மூலம் வாக்காளர்கள் உணர்த்தியுள்ள பாடத்தை பாஜகவும், பிரதமர் மோடியும் மட்டுமல்லாது வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியும் உணர வேண்டியது யாதெனில், மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார ரீதியான, இந்நாட்டின் பொருளாதார சிக்கலால் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தத்திற்கு அரசுகள் தீர்வு காண வேண்டும் என்பதே. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி புளங்காகிதம் அடைவது போல் இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றியல்ல, மாறாக, இதுவரை இருந்த ஆட்சிகளுக்கு எதிரான அவர்களின் கோவத்தின் வெளிப்பாடு = வேறு கட்சிகள் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். 
 
மற்ற இரண்டு மாநிலங்களான தெலுங்கானாவிலும், மிஜோரத்திலும் அம்மாநிலக் கட்சிகளான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், மிஜோ தேசிய முன்னணியும் ஆட்சியைப் பிடித்துள்ளன. தெலுங்கானாவில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்துள்ளன. மிஜோரத்தில் பெரும் பலத்துடன் ஆட்சியில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியைக் கண்டுள்ளது. ஆக மக்கள் ஆட்சியின் மீதான தங்களின் தீர்ப்பை தெளிவாகக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். இதற்குமேல் இவர்களை தேசப்பற்று, தேச ஒற்றுமை, இந்துத்வா, பாபர் மசூதி என்றெல்லாம் சொல்லி திசை திருப்ப முடியாது. பொருளாதார விவகாரங்களில் ஆட்சியின் செயல்பாடுகளே தேர்தல் வெற்றி தோல்விகளை இதற்கு மேல் தீர்மானிக்கும் என்பதற்கான அத்தாட்சி இம்முடிவுகள். 
 
இதுபோலவே நேற்று முன்தினம் தனது பதவி விலகலைத் தந்துள்ள இந்திய மைய வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேலின் முடிவும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
 
இந்நாட்டின் நாணயப் பொருளாதாரம், ரொக்கப் புழக்கம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வங்கிகளின் மீதான ஒழுங்காற்று ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட இந்திய மைய வங்கியின் சுதந்திர செயல்பாட்டையும் பொறுப்பையும் குறைக்கும் வகையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி எடுத்துவரும் முடிவுகளை ஏற்க முடியாது என்று தனது பதவி விலகல் மூலம் இந்நாட்டிற்கு ஒரு செய்தியை தந்துள்ளார் உர்ஜித் படேல். 
 
பிரதமர் மோடி 2016ஆம் ஆண்டு நவம்பரில் அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்த ஒரு பலனும் கிடைத்திடவில்லை – குறிப்பாக கருப்புப் பண ஒழிப்பு என்கிற இலக்கு எட்டப்படவில்லை என்பதை – புழக்கத்தில் இருந்த 99.5 விழுக்காடு பழைய பணத்தாள்கள் வங்கிக்கு திரும்பிவிட்டது என்று இந்திய மைய வங்கியால் அளிக்கப்பட்ட அறிக்கையினால் மோடி அரசுக்கும் மைய வங்கிக்கும் உருவான உரசல், பல இலட்சம் கோடிகளாக உயர்ந்துள்ள வாராக் கடன்களை விரைந்து வசூலிக்கும் நடவடிக்கைகளை பொதுத் துறை வங்கிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மைய வங்கி பிறப்பித்த உத்தரவால் (Prompt Corrective Action – PCA) மோடி அரசு விரும்பவில்லை, 
 
பெரும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு (கார்ப்பரேட்ஸ்) கொடுத்த கடன்கள் பல இலட்சக் கணக்கான கோடிகள் வாராக் கடன்களான நிலையில், அவற்றை மீட்டு வங்கி அமைப்பைக் காப்பாற்றவும் முறைப்படுத்தவும் இந்திய மைய வங்கி மேற்கொண்ட நடவடிக்கையை மோடி அரசு விரும்பவில்லை. அது வங்கிகளின் செயல்பாட்டை முடிக்கிவிட்டதாக கருதுகிறது. வங்கிகள் தங்களுடைய வாராக் கடன்களை வசூலித்து முறைப்படுத்த வேண்டும் என்று அது இட்ட கட்டளையை தளர்த்த வேண்டும் என்று நிதியமைச்சகம் விரும்புகிறது. அதனை ஏற்க மறுத்ததே இந்த மோதலை ஒரு தீவிர நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 
 
இந்நாட்டின் பல்வேறு சுதந்திர அமைப்புக்களை தனது செல்வாக்கிற்கு உட்படுத்த தனது ‘ஆட்களை’ நியமிக்கும் வழிமுறையை கடைபிடித்துவரும் மோடி அரசு, சங் பரிவார் அமைப்பின் பட்டயக் கணக்காளர் ஜி. குருமூர்த்தி, கூட்டுறவு வங்கித்துறையின் எஸ்.கே. மராத்தே ஆகியோரை இந்திய மைய வங்கியின் நிர்வாக வாரியத்திற்கு நியமனம் செய்ததும், இந்திய மைய வங்கி சட்டப் பிரிவு 7இன் கீழ் ஒன்றிய அரசின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் கட்டளையை பிறப்பித்ததும் மைய வங்கியின் சுதந்திரச் செயல்பாட்டில் இதுவரை காணாத ஒன்றிய அரசின் தலையீடாகும். 
 
மோடி அரசின் இத்தகைய செயல்பாடுகளுக்குக் காரணமென்ன? ஒன்று, மைய வங்கிடம் இருக்கும் ரொக்க இருப்பான ௹.9.30 இலட்சம் கோடியில் இரண்டு இலட்சம் கோடியை அரசுக்கு மாற்றும்படி கோருகிறது நிதியமைச்சகம், இதனை ஏற்க மறுத்துள்ளார் உர்ஜித் படேல். இதுவே அரசுக்கும் மைய வங்கிக்கும் இடையே மோதலாகி, அதனை மைய வங்கியின் துணை ஆளுநராக உள்ள விரால் ஆச்சாரியா கூறினார். மைய வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டை மதிக்காத நாடு, உள்நாட்டு அயல்நாட்டு முதலீட்டாளர்களால் புறக்கணிக்கப்படும் என்று வெளிப்படையாகப் பேசினார். 
 
இதனையடுத்தே மைய வங்கியின் செயல்பாட்டை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அதன் நிர்வாக அமைப்பிற்கு தனது ஆட்களை மோடி அரசு நியமனம் செய்தது. ஆனாலும் தனது பொறுப்பை தளர்த்திக்கொள்ள உர்ஜித் படேல் மறுத்தார். மைய வங்கியிடம் உள்ள ரொக்க இருப்பை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை அமைக்கும் முடிவை ஏற்றுக்கொண்டாலும், இறுதி முடிவு எடுக்கும் உரிமையை விட்டுத்தர உர்ஜித் படேல் மறுத்தது உரசலை அதிகரித்தது. 
 
இந்த நிலையில் அடுத்த நிர்வாக்க் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை எதிர்கொள்ளவது இதுவரை இந்திய மைய வங்கி கடைபிடித்த பொறுப்பிற்கும் சுதந்திரத்திற்கு சவாலாக அமையும் என்பதை உணர்ந்த உர்ஜித் படேல் தனது பதவியைத் துறந்துள்ளார். 
 
இதனை இந்நாடு மிகுந்த கவலையோடு எதிர்கொள்ள வேண்டும் என்று மைய வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். மேலும் பல நிதி நிபுணர்களும் கவலையை வெளியிட்டுள்ளனர். மைய வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை வைத்து மோடி அரசு இந்நாடு எதிர்கொள்ளும் நிதிச் சிக்கலை எவ்வாறு தீர்க்கிறது என்பதை பார்ப்போம். 
 
இந்நாட்டு மக்கள் சமூக அரசியல் விவகாரங்களைத் தாண்டி பொருளாதார விடயங்களிலும் முடிவுகளிலும் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த 71 ஆண்டுகளில் அப்படிப்பட்ட முயற்சி ஊடகங்கில் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இதற்கு மேலாவது அதில் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்ப்போம். 
 
கா. ஐயநாதன்.
துணைத் தலைவர்
தமிழர் தேசிய முன்னணி
தலைமைச் செயலகம் 
சென்னை