img/728x90.jpg
img/728x90.jpg
அண்ணன் மோடி - தம்பி இராகுல் - ஓர் அலசல்!

அண்ணன் மோடி - தம்பி இராகுல் - ஓர் அலசல்!

அண்ணன் மோடி - தம்பி இராகுல் - ஓர் அலசல்!

“நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்” என்பது இப்பொழுது இரு அணிகளின் தேர்தல் முழக்கம்! நூற்றுக்கு நூறு வீதம் மக்களை வஞ்சித்தவர்களின் முழக்கம் இது!

நாடாளுமன்றத் தேர்தலின் சந்தடிகளுக்கிடையே நமது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் குடந்தையில் கடந்த 12.03.2019 அன்று முற்பகல் 11 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை நடந்தது.

நாட்டு நிலைமைகளைத் திறனாய்வு செய்வதற்கு முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தன்னைத் தானே திறனாய்வு செய்து கொண்டது. தனது கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள், பண்புக் கூறுகள் போன்றவை குறித்துத் தற்சோதனை செய்து கொண்டது. குறைகளைக் களைய உறுதி ஏற்றது.

தனது கட்டமைப்பில், செயல்பாட்டில் உருவாக்க வேண்டிய புதிய வளர்ச்சித் திட்டங்கள், மாற்றங்கள் குறித்து முடிவுகள் எடுத்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளையோர்க்குக் கூறவேண்டிய கருத்துகளையும் திறனாய்வுகளையும் முடிவு செய்தது. நாடாளுமன்ற தேர்தலிலும் நமது நிலைப்பாட்டை வரையறுத்தது.

பதினேழாவது மக்களவைத் தேர்தல்

இந்திய நாடாளுமன்றத்தின் பதினேழாவது மக்களவைக்கான தேர்தல் 2019 ஏப்ரல் 11 இல் தொடங்கி மே 27 இல் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 ஆம் நாள் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் இரு கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்றின் தலைவர் நரேந்திர மோடி! இன்னொன்றின் தலைவர் இராகுல் காந்தி!

இவ்விருவரும் அரசியலில் “அண்ணன் - தம்பி” என்பது பேரியக்கத்தின் வரையறுப்பு!

பாபர் மசூதியை 1992 இல் இடித்தது அண்ணன் மோடியின் பா.ச.க! அன்று இந்திய ஆட்சியில் இருந்து கொண்டு, பாபர் மசூதிக்கு சற்றுத் தள்ளி இரணுவத்தை நிறுத்தி வைத்துக்கொண்டு பட்டப்பகலில் பாபர் மசூதி இடிக்கப்படுவதை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தது தம்பி இராகுலின் காங்கிரசு ஆட்சி! மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதி கட்டப்படாமல் இரு கட்சி ஆட்சிகளும் பார்த்துக் கொண்டன.

ஆரியத்துவா ஆதிக்கம் - காங்கிரசு மற்றும் பா.ச.க. இரண்டிற்குமுள்ள பொது இலட்சியம்! ஆரிய இன வாதத்தை மூடி மறைத்து இந்துத்துவா என்று பேசுகிறது பா.ச.க.! அதையே இந்தியத்தேசியம் என்று பேசுகிறது காங்கிரசு! இந்துத்துவா, இந்தியத்தேசியம் இரண்டின் அசல் பெயர் ஆரியம்!

ஆரியத்தின் மொழிகள் இந்தியும் சமற்கிருதமும்! இரண்டையும் தமிழ்நாடு உள்ளிட்ட ஆரியமல்லாத மாநிலங்களில் முதலில் திணித்தது காங்கிரசு ஆட்சி; இப்போது திணிப்பது பா.ச.க. ஆட்சி! இந்தி, சமற்கிருதத் திணிப்பில் மோடிக்கும், இராகுலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. மோடியின் இந்தி, சமற்கிருதத் திணிப்பை இராகுல் காந்தி எதிர்க்கிறாரா? இல்லை! 

“இந்துத்துவாவிற்கு நான் எதிரியில்லை” என்று காட்டு வதற்காகத் தனது மார்புப் பூணூலை இழுத்துக் காட்டினார் இராகுல்! அத்தோடு நிற்கவில்லை, ஆரியக் கோத்திரமான தத்தாத்ரேய கோத்திரம்தான் தனது கோத்திரம் என்றும் கூறினார்.

நரியை விரட்ட ஓநாயா?

காவி பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு இராகுல் காந்தியுடன் கை கோத்துள்ள கட்சி யினரே, இராகுல் அணிக்கு வாக்களிக்க முடிவு செய் துள்ள வாக்காளர்களே, இன்னும் பாருங்கள்!

இந்தியாவிற்கு இன்னொரு பெயராக “பாரத்” என்ற காவிப் பெயரை அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றியவர்கள் காங்கிரசார் தானே! இந்திய அரசுக் கொடியில் சிவப்பு நிறம் இல்லாமல் காவி நிறத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் காங்கிரசார் தானே!

ஆட்டுக்கிடையில் நரியை விரட்டுவதற்கு ஓநாயைக் காவல் வைத்தது போல் அல்லவா இருக்கிறது பா.ச.க.வை விரட்ட காங்கிரசை ஆதரிப்பது!

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்யும் நரேந்திர மோடியும் இராகுல் காந்தியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்திக் காவிரி நீர் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கச் செய்வோம் என்று உறுதி அளித்தார்களா? கவனமாக அச்சிக்கலை ஒதுக்கிவிடுகிறார்கள்!

இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ்நாட்டுக் கங்காணிகளாக தி.மு.க., அ.தி.மு.க. அணிகள் செயல்படுகின்றன. காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று இக்கட்சிகள் இராகுலிடமும், மோடியிடமும் நிபந்தனை போட்டனவா? இல்லை! தொகுதியும் தொகையும் தான் நிபந்தனை!

காவிரிப் படுகையை நாசமாக்கி வேளாண்மையை அழித்து ஐட்ரோகார்பன், பெட்ரோலியம், நிலக்கரி எடுக்க ஓ.என்.ஜி.சி. ஓநாய்க்கும் வேதாந்தா உள்ளிட்ட வடநாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கதவு திறந்து விட்டுள்ளதில் மோடியும் இராகுலும் அண்ணன் தம்பிகள் தானே! இத்திட்டங்களைக் கைவிட்டு, காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று இராகுல் வாக்குறுதி கொடுத் துள்ளாரா? பிறகு எந்த வகையில் மோடிக்கு மாற்று இராகுல்?

உயிர்க்கொல்லி ஆலையான ஸ்டெர்லைட்டை மூடக்கூடாது என்ற நிலைப்பாடு மோடிக்கும் இராகுலுக்கும் பொதுவானது! கன்னியாகுமரியில் பேசும்போது இராகுல் காந்தி - மீனவர்களின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர் போல் பேசினார். இவர்கள் ஆட்சியில்தான் அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களப் படையாட்களால் கொல்லப்பட்டனர். தமிழர்களைத் தமிழ்நாட்டுக் கடல் எல்லையில்கூட மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தல், தளைப்படுத்தல், சுட்டுக்கொல்லுதல் என்று தொடரும் சிங்களர்களின் வேட்டையாடலுக்கு மறைமுக அனுமதி தந்து ஊக்குவித்தது காங்கிரசு ஆட்சி; அதைத் தொடர்ந்து செய்து வருகிறது பா.ச.க. ஆட்சி!

ஒரு கரு இரட்டையர்கள்

கன்னியாகுமரி மீனவர்களின் மீன்பிடி உரிமையை அழித்து, குசராத்திக் கொள்ளைக்காரன் அதானிக்கு பன்னாட்டுத் துறைமுகம் கட்ட குளச்சலில் அனுமதி கொடுத்துள்ளது மோடி அரசு. குமரி மாவட்ட மீனவத் தமிழர்கள் கொதித்துப் போய் போராடுகிறார்கள். அந்தக் குமரியில் நின்று கொண்டு மீனவ நண்பன் போல் நடித்த இராகுல், குளச்சலில் புதிய சரக்குத் துறைமுகம் கட்டமாட்டோம் என்று அறிவித்தாரா? இல்லை! பிறகு எப்படி மோடி கெட்டவர், இராகுல் நல்லவர்! இந்திய ஏகாதிபத்திய அரசியலில் இருவரும் ஒரு கரு இரட்டையர்கள்!

கூடங்குளம் அணு உலை, தேவாரம் நியூட்ரினோ, சேலம் எட்டுவழிச்சாலை, மேற்குத் தமிழ்நாட்டில் விளை நிலத்தில் கெய்ல் குழாய் புதைப்பது, உயர் மின் அழுத்தக் கோபுரம் நடுவது உள்ளிட்ட பற்பல மக்கள் பகைத் திட்டங்களைத் தமிழர்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். இந்தச் சிக்கல்களில் எல்லாம் இந்த இரட்டையர்கள் தமிழர்களுக்கு எதிராக ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள்.

காந்தியடிகளைக் கொலை செய்த வழக்கில் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே வாழ்நாள் தண்டனை பெற்றார். பதினான்கு ஆண்டுகளில் அவரை விடுதலை செய்தது மராட்டிய காங்கிரசு ஆட்சி. அதை ஏற்றுக் கொண்டது அப்போதைய காங்கிரசின் நடுவண் ஆட்சி! ஆனால், இராசீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மோடி அரசு மறுக்கிறது. இராகுல் கட்சியும் அதே நிலை எடுத்துள்ளது. தமிழர்களுக்கெதிரான இனப்பாகுபாட்டில் மோடியும் இராகுலும் ஒன்றுதான்!

காங்கிரசும் பா.ச.க.வும் போட்டிப் போட்டுக்கொண்டு மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றன. மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியைத் தில்லியின் மேலாதிக்கமுள்ள பொதுப்பட்டியலுக்கு மாற்றியவர் இராகுலின் தாயார் இந்திராகாந்தி.  “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக”, “இந்தியாவின் மருமகளே வருக, எங்களை ஆள்க!” என்றெல்லாம் குரல் கொடுத்து காங்கிரசு தலைமையில் கூட்டணி அரசில் இருந்த கருணாநிதி, கல்வி உரிமையை மாநில அரசுக்கு மீட்டாரா? கூட்டணி சேர அதை ஒரு நிபந்தனை ஆக்கி னாரா? இல்லை! இப்போது அவர் மகன் ஸ்டாலின் தந்தையின் பாணியில் “இராகுலே வருக எங்களை ஆள்க” என்று முழக்கமிடுகிறார்.

கல்வி அதிகாரத்தை மீண்டும் மாநிலத்திற்கு வழங்குக என்றோ, நீட் தேர்வைக் கைவிடுக என்றோ, ஜி.எஸ்.டி. வரியைக் கைவிட்டு, மாநில அரசின் விற்பனை வரி உரிமையை மீண்டும் நிலைநாட்டுக என்றோ ஸ்டாலின் இராகுலுடன் நிபந்தனை போட்டாரா? இல்லை!  

“இந்தியாவிலேயே யாரும் முன்மொழியாத போது நான்தான் முதல் முதலாக - இராகுல்தான் எங்களின் பிரதமர் வேட்பாளர் என்று முன்மொழிந்தேன்” என்று மார்த்தட்டிக் கொள்கிறார் ஸ்டாலின். காட்டிக் கொடுப்பதிலும் கங்காணி வேலை பார்ப்திலும் எவ்வளவு பெருமை பாருங்கள்!

கன்னியாகுமரிப் பொதுக் கூட்டத்தில் தங்கள் “கதாநாயகன்” இராகுல் முன்னிலையில் பேசிய தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஐயா வீரமணி “ஜூலியஸ் சீசர் வந்தார், கண்டார், வென்றார் என்பார்கள்; இங்கே இராகுல் காந்தி வந்தார் கண்டார் வென்றார்” என்று முழங்கி தம் பேச்சை முடித்தார்! வீரமணியாரின் திராவிட இனமானக் குரல் கன்னியாகுமரி விவேகானந்தா மிஷன் பாறையில் எதிரொலித்திருக்கும்!

கொள்கை வேறு - கூட்டணி வேறு!

பதவிக்கும் பணத்திற்கும் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுப்பவைதான் - அடமானம் வைப்பவைதான் தி.மு.க. அணியும் அ.தி.மு.க அணியும்! ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையிலான அ.திமு.க. மோடியின் அடிவருடிச் சேவகம் செய்கின்றது.

குடும்ப அரசியலின் கொள்ளை நிறுவனங்களாகத் தமிழ்நாட்டில் பல கட்சிகள் செயல்படுகின்றன. உச்சித் ஒன்றியத் தலைமையில் தலைவரின் குடும்ப வாரிசுகள்; மாவட்ட, தலைமையில் அந்தந்தத் தலைமையின் வாரிசுகள் பொறுப்புக்கு வருகிறார்கள்; தேர்தலில் போட்டியிடு கிறார்கள். எனவே இவை குடும்ப ஆதாயத்திற்கேற்ப கூட்டணி சேர்ந்து கொள்கின்றன. “கொள்கை வேறு; கூட்டணி வெறு” என்று புதிய “கோட்பாடும்” கூறு கின்றன. 

தமிழ், தமிழினம், தமிழ்நாடு மூன்றையும் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்து பலி கொடுப்பவைதாம் காங்கிரசும் பா.ச.க.வும்!

சரி, தமிழ், தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க, மீட்க வேறு என்ன வேண்டும்?

தீர்வு தான் என்ன?

 இருதய நோய்க்கு இஞ்சி மரப்பா சாப்பிட்டால் குணமாகுமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றிடாமல் தமிழ்நாட்டு உரிமையை மீட்க முடியுமா? முடியாது!

இந்திய அரசரமைப்புச் சட்டத்தை மாற்றுகின்ற இடம் நாடாளுமன்றம் தானே, அங்கு நம்மவர்கள் போகவேண்டுமல்லவா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

புதுவையையும் சேர்ந்து நமக்கு நாற்பது இடங்கள் நாடாளுமன்ற மக்களவையில்! மக்களவையின் மொத்த இடங்கள் 543.

தமிழ்நாட்டிலும் புதுவையிலும் எட்டுக்கோடி தமிழர்கள் இருக்கிறோம். இந்தியாவில் மொத்தமாக பத்துக்கோடி தமிழர்கள் இருப்போம். நமக்கு 40 இடங்கள்! பிரிட்டனைவிட, பிரான்சைவிட நம் மக்கள் தொகை அதிகம்! எந்தத் தொடர்புமில்லாத பல இனங்களுடன் நம்மையும் சேர்த்து செயற்கையாகத் தமிழர்களை சிறுபான்மை ஆக்கியது  ஆங்கிலேயர் ஆட்சி. ஆங்கிலேயரிடமிருந்து அதே இந்தியாவைப் பெற்றுக் கொண்டது ஆரியம்! அன்று இலண்டனுக்குக் காலனி! இன்று தில்லிக்குக் காலனி!

மக்களவையில் பத்து இந்தி மாநிலங்களின் உறுப்பினர்கள் 225 பேர்! இந்தி பேசாத பல மாநிலங்களும் இந்தியுடன் ஆரியத்துடன் இணக்கம் கொண்டவை. காரணம், அவற்றின் மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை! இந்த மாநிலங்கள் பலவற்றை பா.ச.க. அல்லது காங்கிரசு ஆள்கின்றது; அல்லது முதன்மை எதிர்கட்சியாய் இருக்கின்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இருபங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மொத்தமே 40 உறுப்பினர்களைக் கொண்ட நாம் என்ன செய்ய முடியும்? 

கொஞ்ச நஞ்சம் இருந்த மாநில அதிகாரங்களையும் தவணை முறையில் பறித்துத் தில்லியில் குவித்து விட்டார்கள். தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள 234 இடங்களையும் வென்று இன உரிமை இயக்கம் ஒன்று ஆட்சி நடத்தினாலும் அதன் வழியாக, இழந்த உரிமைகளை மீட்க முடியாது; புதிய உரிமைப் பறிப்புகளையும் தடுக்க முடியாது. அவ்வாறான உரிமையை - அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கவில்லை. 

தில்லிக்குக் கங்காணியாகச் செயல்படும் ஓர் ஆட்சி மாநிலங்களில் இருக்க வேண்டும் என்பது தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம்! இந்த உண்மையை வெவ்வேறு சொற்களில் பேராசிரியர் வியர் தொடங்கி நம்முடைய ஆலடி அருணா வரை பலர் எழுதியுள்ளனர். இதுபற்றி அண்ணா பேசாத பேச்சா?

நான் மாநில ஆட்சியைக் கங்காணி ஆட்சி என்று சொல்கிறேன். அண்ணாவோ உவமை நயத்துடன் தில்லிக்குக் காவடி தூக்கும் ஆட்சி என்றார். தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆன பின்னும், “தனிநாட்டுக் கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்றார் அண்ணா!

தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்கவும் மீட்கவும் வேறு என்னதான் தீர்வு? இடைக்காலத் தீர்வு, இறுதித்தீர்வு என்று இரண்டு இருக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் பகுதியில் உறுப்பு 19(1) இருக்கிறது. அதில் ஆயுதம் ஏந்தாமல் உரிமைக்குப் போராடும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

அதைப்பயன்படுத்தி மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நடத்தினால், மட்டுமே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக வெளியேற்ற  முடியும்; காவிரிப் படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. மற்றும் பெருங்குழும (கார்பரேட்) ஓநாய்களை ஓட்ட முடியும். இதைப்போல் மற்ற மண்ணுரிமைகளைக் காக்க முடியும்; ஆற்றுரிமை கடல் உரிமை மீட்க முடியும். அதாவது இந்திய ஏகாதிபத்திய அரசுக்கும் தமிழ்நாட்டுக் கங்காணி ஆட்சிக்கும் அழுத்தம் கொடுத்துப் போராடினால், சல்லிக்கட்டு உரிமையை வென்றதுபோல் இடைக்காலத் தீர்வுகளைப் பெற முடியும். இறுதித் தீர்வு என்பது தமிழ்நாட்டின் இறையாண்மையை மீட்பது!

இதெற்கெல்லாம் இந்திய அரசு செவி கொடுக்குமா? நம் மக்கள் தாம் போராட முன் வருவார்களா? தமிழ்நாட்டு இறையாண்மையை மீட்க முடியுமா? இவற்றை அடுத்த சந்திப்பில் பார்ப்போம்! இப்பொழுதே உரையாடல் நீண்டு விட்டது!

தோழர் பெ. மணியரசன்

தமிழ்த்தேசியப் பேரியக்கம்.