• :
  • :
களத்தில்

தீ வேகமாகப் பரவியது: நாலாபுறமும் ஓடினோம்- 14 பேரை அழைத்துச்சென்ற ஓட்டுநர் கண்ணீர் வாக்குமூலம்

தீ வேகமாகப் பரவியது: நாலாபுறமும் ஓடினோம்- 14 பேரை அழைத்துச்சென்ற ஓட்டுநர் கண்ணீர் வாக்குமூலம்

தீ வேகமாகப் பரவியது; நாலாபுறமும் ஓடினோம் - 14 பேரை அழைத்துச்சென்ற ஓட்டுநர் கண்ணீர் வாக்குமூலம் 

 
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியது எப்படி என 14 பேரை அழைத்துச் சென்ற ஓட்டுநர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
ஈரோடு மாவட்டம், சென்னிமலை காட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு [ 30 ] என்பவர்தான், ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த தன்னுடைய முகநூல் நண்பர்கள் 12 பேரை ஒருங்கிணைத்து, மலைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
 
காட்டுத்தீயிலிருந்து தப்பித்த அவர், போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “tour de india holidays என்ற பெயரில் ஈரோடு - பெருந்துறை வழியில் உள்ள திண்டல் பகுதியில் நான் சுற்றுலா அலுவலகம் வைத்துள்ளேன். கடந்த 09.03.2018 அன்று இரவு 9.30 மணியளவில், சென்னிமலையிலிருந்து அருள்முருகன் மேக்ஸ் கேப் வாகனத்தின் மூலமாக தேனி மாவட்டம் குரங்கணி பகுதிக்கு மலையேறும் பயிற்சிக்காகவும் சுற்றிப்பார்க்கவும், நானும் முகநூல் நண்பர்களான ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்குமார், கண்ணன், விவேக், சக்திகலா, சவீதா, திவ்யா,நேகா, தமிழ்ச்செல்வன் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த ராஜசேகர், சாதனா, பாவனா என மொத்தம் 12 பேருடன் புறப்பட்டு, தேனி வழியாக 10.03.2018 அன்று போடி சென்றோம். போடியில் உணவை முடித்துவிட்டு குரங்கணிப் பகுதியை நன்கு அறிந்த ரஞ்சித் என்ற வழிகாட்டியுடன் காலை சுமார் 9 மணிக்கு குரங்கணிக்குச் சென்றோம். பிறகு, நாங்கள் சென்ற வேனை குரங்கணியில் நிறுத்திவிட்டு மலையேறத் தொடங்கினோம். நரிப்பட்டி, ஒத்தமரம் வழியாக கொழுக்குமலை பகுதிக்கு மாலை 6 மணிக்கு சென்றடைந்தோம். பிறகு, கொழுக்குமலையில் உள்ள டென்ட் கேம்பில் இரவு தங்கினோம்.
 
எங்களுக்குப் பின், சென்னையைச் சேர்ந்த அருண் என்பவருடன் சுமார் 26 நபர்கள் கொழுக்குமலை வந்து எங்களுக்கு அருகிலேயே தங்கினார்கள். இந்த நிலையில், நேற்று காலை (11.03.2018) கொழுக்குமலையிலுள்ள டீ தொழிற்சாலையைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தோம். காலை 9 மணியளவில் அருணுடன் வந்தவர்களில் 3 பெண்களுக்கு நடப்பதில் சிரமம் இருந்ததால், அவர்களை ஒரு ஜீப்பின் மூலமாக சூரியநல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டு, எங்களுக்கு முன்னதாக குரங்கணிக்கு இறங்கினார்கள். அதன்பின்னர், ஒருமணி நேரம் கழித்து எங்கள் குழுவும் குரங்கணிக்கு இறங்கி வந்தோம். 
 
மதியம் சுமார் 2 மணிக்கு, வனப்பகுதிக்குள் வரும்வழியில் ஒத்தமரத்தில் எங்களுக்கு முன்னதாக வந்த அருண் மற்றும் அவருடைய குழுவினர், மதிய உணவருந்திவிட்டு ஓய்வில் இருந்தனர். எங்களுக்கு வழிகாட்டியாக வந்த ரஞ்சித், காட்டுத்தீ அருகில் வந்துவிட்டதால் நாம் வேகமாகக் கீழே இறங்க வேண்டும் என்று வேறு பாதை வழியாக எங்களையும், அருணுடன் வந்தவர்களையும் அழைத்துச்சென்றார்.
 
அப்படிச் சென்ற வழியில், அசம்பாவிதமாக காட்டுத்தீ வேகமாக எங்களை நெருங்கியதால், குழுவாக வந்த நாங்கள் தப்பிக்கும் நோக்கத்தோடு நாலாபுறமும் பிரிந்து சென்றோம். அதற்குள் காட்டுத்தீ முழுக்க சூழ்ந்துவிட்டது. நானும் ரஞ்சித், சாதனா, பாவனா, நேகா, ராஜசேகர், அருணுடன் வந்தவர்களில் 3 பெண்கள் மட்டும் தீக்காயம் ஏதுமின்றி தப்பித்து குரங்கணிக்கு வந்துவிட்டோம். காட்டுத்தீ அணைந்த பிறகு, குரங்கணி நரிப்பட்டியில் உள்ள மக்கள், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் சென்று பார்க்கையில் 9 பேர் தீக்காயம் பட்டு இறந்துகிடந்தனர்” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.