• :
  • :
களத்தில்

தமிழ்நாடு - இந்திய வல்லாதிக்கத்தின் சோதனைக் களம்.

தமிழ்நாடு -  இந்திய வல்லாதிக்கத்தின் சோதனைக் களம்.

தமிழ்நாடு -  இந்திய வல்லாதிக்கத்தின் சோதனைக் களம்.

நியூட்ரினோ திட்டத்தை வச்சு அப்படி என்னத்ததான் கண்டுபிடிக்க போறாங்க ? நியூட்ரினோ திட்டம் குறித்த முழு தகவல்

பால் வீதியெங்கும் பரவிக்கிடக்கும் கண்களுக்கு புலப்படாத ஒரு துகள்தான் நியூட்ரினோ. ஒவ்வொரு மைக்ரோ வினாடியும் நம்மை கடந்து செல்லும் இந்த நுண்துகள்கள் மீதான விஞ்ஞானிகளின் பார்வை 1930-ற்கு பிறகு தான் தீவிரமடையத்துவங்கியது.

இந்திய விஞ்ஞானிகளின் பங்கிற்கு 1965-ல் கோலார் தங்கவயல் சுரங்கத்தில் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் நியூட்ரினோ துகள்களை கண்டறிய ஒரு திட்டம் தீட்டப்பட்டு தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ‘இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம்’ (Indian Based Neutrino Observatory – INO) என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதிலும் உள்ள அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது.

அவர்கள், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்ய இந்தியா முழுவதும் பயணப்பட்டார்கள். குஜராத்திலும், தமிழக கேரள எல்லையான குமுளியிலும் இடங்களை தேர்வு செய்தாலும் அங்கே கடும் எதிர்ப்புகளை சந்தித்தனர். இறுதியாக, தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் அம்பரப்பர் மலை, நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தேர்வானது.

என்ன செய்வார்கள்?

ஒரே பாறையினால் ஆன அதன் அமைப்புதான் பொட்டிபுரம் மலை தேர்வானதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கிலோ மீட்டர் கீழே, மலையின் பக்கவாட்டில் இருந்து 2.5 கிலோ மீட்டார் தூரத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். அதன் உள்ளே நியூட்ரினோ துகள்களை கண்டறியும் டிடெக்டர் பொருத்தப்படும்.

‘’இந்த ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக அம்பரப்பர் மலையை குடைய பல ஆயிரம் கிலோ வெடி மருத்துகள் பயன்படுத்துவார்கள். இதனால், அருகில் இருக்கும் 12 நீர் தேக்கங்கள் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக முல்லைப்பெரியாறு பாதிக்கப்படும். இது ஒருபுறம் என்றால், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இருக்கும் மேற்குத்தொடர்ச்சிமலையின் சூழலியல் பாதிப்புக்குள்ளாகும். மேலும், செயற்கை நியூட்ரினோ கதிர்களை ஆய்வு செய்யும் வகையில்தான் இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகத் தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது என்பதே எங்கள் குற்றச்சாட்டு.!’’ என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன்.

நிறுத்தப்பட்ட பணிகள்.!

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இயற்கை ஆர்வலர்களுடன் பொட்டிபுரம் கிராம மக்களும், அருகே இருக்கும் டி.புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன்பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குபட்டி ஆகிய கிராம மக்களும் இணைந்துகொண்டனர். சில சுற்றுச்சுழல் அமைப்புகளும், சில கட்சிகளும் அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்க, மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதனைத்தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வுப் பணிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சில வழக்குகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக, இத்திட்டமானது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மேலும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு தொடுத்த வழக்கில், நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைப்பதாக உத்தரவிடப்பட்டது. இதனால் இத்திட்டத்தை கைவிடும் நிலைக்குச் சென்றுவிட்டது மத்திய அரசு. அதுவரை நடைபெற்ற பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

திடீரென வேகம் கொடுத்த மத்திய அரசு.!

தொடர் போராட்டங்கள், நீதிமன்றங்களில் வழக்குகள் என முடங்கிக்கிடந்த நியூட்ரினோ திட்டத்திற்கு, கடந்த டிசம்பர் மாதம் வேகம் கொடுத்தது மத்திய அரசு. மத்திய அமைச்சரவைச் செயலர் கே.பி.சின்ஹாவிற்கு பிரதமர் மோடி, ’நாட்டில் சிக்கல்களுக்கு ஆளாகி கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்.

குறிப்பாக நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்று பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்’ என உத்தரவிட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சமூக அமைப்புகள் தங்களது கண்டங்களை பதிவு செய்தது மட்டுமல்லாமல், அப்பகுதியில் விழிப்புணர்வு பிரசாரங்களையும் செய்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த விழிப்பு உணர்வு பிரச்சாரங்களை ஒருங்கிணைத்தார். ‘’மீண்டும் போராட நாங்கள் தயார்.!’’ என்றனர் அப்பகுதி மக்கள்.

இச்சூழலில், நேற்று (26/03/2018)  நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்திற்கு முழுமையான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது. முன்னதாக Tata Institute of Fundamental Research நிறுவனமானது கடந்த ஜனவரி 5-ம் தேதி நியூட்ரினோ திட்டப் பணிகளுக்கான அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக்குழுவிடம் விண்ணப்பித்தது.

அதன் அடிப்படையில்தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ’’நியூட்ரினோ திட்டத்தால் எந்தவித கதிர்வீச்சு அபாயமும் இல்லை. இத்திட்டத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 340 கி.லி தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம். இதனை சிறப்புத்திட்டமாக செயல்படுத்த இருப்ப அனுமதியளிக்கப்படுகிறது. இதனால், இனி பொதுமக்களின் கருத்துக்கள் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. இதில் ஆட்சேபனை இருப்பில் 30 நாள்களுக்குள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கலாம்.’’ என்றும் அந்த அனுமதிக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாநில அரசு என்ன செய்யப் போகிறது?

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த அனுமதியானது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதில் ஒன்று முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுப்பது. தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இருக்கும் மிக முக்கிய தண்ணீர் பங்கீட்டுப்பிரச்சனைகளில் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையும் ஒன்று.

இந்நிலையில், அணையில் இருந்து தினமும் தண்ணீர் எடுப்பது இரு மாநில மக்களும் ஏற்றுக்கொள்ளாத ஒரு விஷயம். மேலும், தமிழகத்தில் இருக்கும் ஒரு ஆய்வு நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க கூடாது என கேரளாவில் இருந்து குரல்கள் எழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மேலும், ஏற்கனவே பசுமைத்தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வாங்கி வைத்துள்ள தடையாணையை உடைக்கும் செயலை மத்திய அரசு செய்துவிட்டு, ஆட்சேபனை இருந்தால் மீண்டும் பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என்று சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.!

இவையெல்லாம் ஒருபுறம் என்றால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என வைகோ வாங்கிவைத்துள்ள தடையாணை என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

‘’மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்தால், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம்.!’’

என ஒருமுறை துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார். ஆனால், தற்போதைய அரசியல் சூழலை வைத்து பார்க்கும்போது, மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

அதனைத் தொடர்ந்து, ’’நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு தேவையான நியூட்ரினோ சிறப்புத்திட்டம் நம் மாநிலத்தில் அமைவது நமக்கு பெருமை.!’’ என நம் முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.