இராணுவம் வரலாம், போலீசார் வரலாம், வெள்ளைக்காரன் வரலாம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டும் தமது வேண்டுதல்களுக்காக வரக்கூடாது. கதவடைக்கும் நல்லூர் கோவில் நிர்வாகம்
உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சொந்த மண் விட்டு பிரிந்த ஏக்கம் தீர்க்க தாயகம் செல்லும் பொழுது நல்லூர் திருவிழா பார்க்க என்றே ஊருக்கு போகும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
உலக தமிழ் மக்களின் கொட்டி கொடுக்கும் நிதியில் கோடீஸ்வரர்களாக இருக்கும் நல்லூர் கந்தன் ஆலய உரிமையாளர்கள் காலம் காலமாக தமிழ் மக்களின் நிதியை கொள்ளை கொள்ளையாக ஆலய வியாபாரத்தில் பெற்று மக்கள் சொத்தாக ஆக்காமல் தனியுடமை சொத்துக்களாக பேணி அதி உச்ச இலாபம் ஈட்டும் வியாபார ஸ்தாபனமாக வைத்திருக்கின்றனர்.
கடவுள் என்றால் எல்லோருக்கும் எளியராக இருக்க வேண்டும். எல்லோரையும் காக்கும் தெய்வமாக இருக்க வேண்டும். இன்னமும் சொன்னால் துன்பத்தில் இடிந்து போன உறவுகள் நாடி வந்தால் ஆறுதல் கொடுக்கும் தலமாக ஆலயம் இருக்க வேண்டும்.
மாறாக கண்ணீரோடு சென்ற மக்களை அவமதித்து மிதித்து விரட்டியிருக்கிறது நல்லூர் கந்தன் ஆலய நிர்வாகம்..
நல்லூர் கோவிலுக்குள் இராணுவம் போகலாம். சிங்கள காவல்துறை போகலாம், அரசியல்வாதிகளும் போகலாம் ஆனால்
போராடும் தமிழ் மக்கள் உள்ளே நுழைய கூடாது என்றும் மதிலுக்கு வெளியே கூட நிற்க கூடாது என்றும் முன்பே தடுத்து விமர்சனத்திற்கு உள்ளானவர்கள் இந்த ஆலய நிர்வாகத்தினர்.
இன்றும் மீண்டும் அவர்கள் 500 நாட்களுக்கும் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகள் நினைவில் போராடும் அம்மாமார் சிலர் இறைவனை வேண்டி நல்லூர் கந்தசாமி கோவிலுக்குள் சென்று அமைதி வழியில் தேங்காய் உடைத்து வணங்க சென்ற பொழுது அவமதித்து விரட்டி இருக்கின்றார்கள் கோவில் நிர்வாகத்தினர்.
கண்ணீர் விட்டு அழும் மக்களுக்கு இரங்காத கடவுள் மக்களுக்கு எதற்கு? அப்படி ஒரு பயனில்லா கோவிலுக்கு மக்கள் வாரி வாரி கொட்டி கொடுப்பது எதற்கு?
மக்களுக்கு பயன் தராத கோவில் எங்கள் மண்ணில் எதற்கு?
இதற்காகவா இந்த கோவிலுக்கு கொட்டி கொட்டி கொடுத்தீர்கள் உறவுகளே?
பதில் சொல்லுங்கள்!
கடவுளை வைத்து வியாபாரம் செய்து கொண்டு மக்களை மிதித்து ஏமாற்றிக்கொண்டு அரச கைக்கூலியாக செயல்படும் ஆலயத்தை இனியும் நீங்கள் மதிப்பீர்களா?